Monday, 15 December 2014

ஜான் பென்னிகுயிக்

யார் இந்த ஜான் பென்னிகுயிக்.....?
இது 118 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை...
தமிழகத்தின் நெல்லைமாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறு அது(முல்லைப் பெரியாறு). குமுளி வழியாக கேரளாவுக்குள் பயணம் செய்து அரபிக்கடலில் கலந்து கொண்டிருந்தது. குமுளி மலைக்குக் கிழக்கே தமிழகத்தில் தேனிமாவட்டம் தொடங்கி அதைச்சுற்றியிருந்த சுமார் இரண்டரை லட்சம் ஏக்கருக்கும் அதிகமான (அரிசி தரும்) நெல் விளையும் பூமி தண்ணீரின்றி வறண்டு கிடந்தன. தலைக்கு மேலே கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் அதுவும் தமிழகத்தில் உற்பத்தியாகிற தண்ணீர் ஒரு சொட்டுக்கூட தங்களுக்குக் கிடைக்காமல் அரபிக்கடலில் எந்த மனிதர்க்குப் பலனின்றி கலந்து உப்பாகிக்கொண்டிருந்தது.
தேனிமாவட்டப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் உணவுக்கு கிழங்குகளைப் பறித்து தின்றுகொண்டும், வழிப்பறி, கொள்ளை அடித்துக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வேறு வழி இல்லை...உணவுக்கு என்னவேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது.
பிரிட்டிஷ் பொறியாளராக இந்தப்பகுதிக்கு வந்திருந்த ஜான் பென்னிக்குயிக்....இந்த மக்களின் நிலையைப்பார்த்துப் பரிதாப்படுகிறார், பதறுகிறார். கண்ணுக்குத் தெரியும் மலையின்மீது ஆறு ஓடுகிறது...அது கீழேவந்தால் இந்தப்பகுதி வளம் பெறும்.
அந்தத்தண்ணீரை அப்படியே கீழே கொண்டுவருதற்கு வழி இல்லை. அதற்கு பல கோடி ரூபாய் செலவாகும். அப்படியானால் குமுளி (கேரளப்பகுதி) ஆற்றுக்குக்கு குறுக்கே அணை ஒன்று கட்டவேண்டும். அந்த அணை அரபிக்கடலில் ஓடிக்கலக்கும் தண்ணீரைத் தடுத்து தேக்கி வைக்கும். அதாவது மேற்கு நோக்கி ஓடும் ஆற்றை அணை கொண்டு தடுத்து (தேவையான அளவு தேக்கிக்) கிழக்கு நோக்கித் திருப்பவேண்டும். மீதமுள்ள தண்ணீர் அரபிக்கடலுக்கே செல்லலாம். (இந்தவகையில் அத்தகைய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் அணை இது)
கிழங்கையே மூன்று வேளை உணவாக உண்டு வாழும் மக்கள் வாழ்க்கை முறை மாறும் என்று எண்ணுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு பட்ஜெட் தருகிறார். அரசும் அரைமனதோடு முதல்கட்டமாக சிறு தொகை ஒன்றைத் தருகிறது. சுண்ணாம்பு, சுட்ட செங்கல் ஜல்லி, சர்க்கரை, கால்சியம் ஆக்சைடு, முட்டை என கலவைகள் உருவாக்கப்பட்டு கட்டப்படவேண்டும்.
அணை கட்டுவதற்குத் தொடங்கியபோது காட்டுக்குள் விலங்குகள் தொல்லை, யானைகள் தொல்லை என பலவித இயற்கை செயற்கை தொல்லைகளைச் சந்திக்கிறது கட்டுமானக்குழு. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பலவித பாதிப்புகளையும் தாண்டி அணைக்கட்டுமானம் நடக்கிறது.
ஒரு இரவு தொடங்கிய மழை..தொடர்ந்து பெய்ய கட்டப்பட்ட கட்டுமானம் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறது. பென்னிக்குயிக்கின் கனவும் அந்த மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்படுகிறது. கூலிக்காக இல்லாமல் தங்கள் சந்தததிகளின் வாழ்வாதாரத்திற்காக கல்லும், மண்ணும் சுமந்து குழந்தை குட்டிகளோடு காட்டுக்குள் ஒட்டிய வயிறோடு பாடுபட்ட அத்தனை ஊழியர்களின் கனவுகளும் மழைவெள்ளத்தில் அடித்துசெல்லப்படுகிறது. அடர்ந்த வனாந்திரத்தில் ரத்தம் சிந்திக்கட்டிய அணை காட்டாற்று வெள்ளத்தோடு கலந்து கண்முன்னே பறிபோகிறது.
பிரிட்டிஷ் அரசின் உயர் அதிகாரிகளை அணுகுகிறார் பென்னிக்குயிக். மூன்று ஆண்டுகள் கட்டிய நிலையில் அணைக்கட்டுமானம் உடைந்துபோன நிலையில் அவரை மேலும்கீழும் ஏளமானகப்பார்த்த அவர்கள் இனிமேல் சல்லிக்காசுகூடக் கொடுக்கமுடியாது என்று கைவிரித்து விடுகின்றனர். தளரவில்லை பென்னிக்குயிக். தனது நாட்டுக்குச் செல்கிறார். தனக்கும் தன் மனைவிக்குச் சொந்தமான அத்தனை சொத்துக்களையும் விற்றுக்காசாக்குகிறார். மீண்டும் தேனிமாவட்டத்திற்கு வருகிறார்.
இந்தமுறை பென்னிக்குயிக்கின் சொந்தக்காசில் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது முல்லைப்பெரியாறு அணை. இந்த முறை இயற்கையும் அவருக்கு ஒத்துழைத்தது. முல்லைப்பெரியாறு அணை கட்டியதோடு மட்டுமல்லாமல், அந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை தேனி மாவட்ட நிலப்பரப்புக்குகொண்டு வர ராட்சத குழாய்களைப் பதித்து தண்ணீரை தரைக்குக் கொண்டுவருகிறார் பென்னிகுயிக். அஸ்திவாரத்தில் இருந்து 176 அடி உயர அணை அது. அதன் அப்போதைய மதிப்பு 1.04 கோடி ரூபாய் (!).
காய்ந்து வறண்டுபோய் வானம் பார்த்துக்கிடந்த 3 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான நிலப்பரப்புக்கு தண்ணீர்கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் மூன்று வேளை நல்லுணவு உண்ணுகின்றனர். எவரையும் துன்புறுத்தாத நாகரிக வாழ்வியலுக்கு மாறுகின்றனர் லட்சக்கணக்கானோர். கோடிக்கணக்கான மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கிறது.
தேனிமாவட்டத்தின் தேவைகளை நிறைவேற்றியபின் அப்படியே கிழக்கு நோக்கி ஓடும் இந்த தண்ணீர், மதுரையைக் கடந்து அங்கும் தாகம் தீர்த்துவிட்டு, சிவகங்கை மாவட்டத்திற்கும் தாகம் தீர்த்துவிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தையும் ஈரப்படுத்திவிட்டு வங்காளவிரிகுடாவில் இறுதியில் கலக்கிறது. மேற்கே அரபிக்கடலில் கலந்த தண்ணீரை வங்காள விரிகுடாவிற்குத் திருப்பிவிட்ட பென்னிகுயிக் எத்தனை சந்ததிகளுக்கு எத்தனை கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறிப்போனார் ? அதுவும் தன் சொந்தக்காசில்...?!
இந்த அணை 50 ஆண்டுகள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்றே அவரைக் கேலி செய்தனர் அன்றைய பிரிட்டிஷ் சக பொறியாளர்கள். ஆனால் 119 ஆண்டுகளையும் தாண்டி இன்னமும் பல 100 ஆண்டுகளுக்கு வலுவாக இருக்கும் தரத்தில் உள்ளது முல்லைப்பெரியாறு அணை. 119 ஆண்டுகளுக்கு முன்னரே 1 கோடியே 40 லட்சம் ரூபாய் என்றால் இன்று இந்த அணையின் மதிப்பு எத்தனை கோடிகள்....???? !!!
இத்தகைய மாபெரும் புரட்சியின் நாயகன்தான் ஜான் பென்னிக்குயிக்..!

No comments:

Post a Comment